பொதுமக்கள் தங்களுக்கிடையேயான தகராறுகளை நீண்டகாலம் நீதிமன்றத்தில் வழக்காக நடத்தாமல், சமரச முறையின் மூலம் தீர்த்துக்கொள்ளும் வகையில் ‘சமரசம் 3.0 – Mediation for Nation 3.0’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் பாரம்பரிய நீதிமன்றக் கட்டிடத்தின் 3-வது நுழைவாயில் அருகில் இன்று காலை சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும், தமிழ்நாடு சமரசம் மற்றும் சமரச மையக் குழுத் தலைவருமான நீதிபதி எம். தண்டபாணி, குழு உறுப்பினர்களான நீதிபதிகள் ஜி.கே. இளந்திரையன், பி. புகழேந்தி, டி. பாரத சக்ரவர்த்தி ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு சமரசம் மற்றும் சமரச மையத்தின் இயக்குநர் கே. பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர்கள், சமரச மைய ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 1,000 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.
பேரணியில் பங்கேற்றவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று பொதுமக்களுக்கு சமரசம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருமண மற்றும் குடும்பத் தகராறுகள், வாடகை மற்றும் இழப்பீடு தொடர்பான பிரச்சினைகள், காசோலை வழக்குகள், வணிகத் தகராறுகள், கடன் மீட்பு வழக்குகள், சொத்து மற்றும் வாரிசு பிரச்சினைகள் உள்ளிட்ட சமரசம் செய்யக்கூடிய பல்வேறு வழக்குகளை சமரச மையங்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
நீதிமன்றத்தை நாடி நீண்டகாலம் காத்திருப்பதைத் தவிர்த்து, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பெறுவதால் நேரம், செலவு மற்றும் அலைச்சலை குறைக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
‘தகராறுகளைத் தீர்ப்போம்; அமைதியை மீட்டெடுப்போம்; சமரசத்தைத் தேர்ந்தெடுப்போம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு ‘சமரசம் 3.0’ விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.