சென்னை: காவிரி விவகாரத்தை தவெக அரசு ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை எனவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாதது வேதனையளிப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி நதி நீர் பிரச்சனைக்கு தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்றே தெரியவில்லை. காவிரி நதி நீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை கட்டுவது குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும், பல்வேறு விவசாய பிரதிநிதிகளையும் அழைத்து பேசி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும். மேலும், மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அதிமுக சார்பாக ஏற்கனவே நான் ஊடகங்கள் வாயிலாக அறிக்கை வெளியிட்டேன்.

அதே போன்று, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய பிரதிநிதிகளும் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால், இந்த அரசு அதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. அதை ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது” என விமர்சித்தார்.

“இதற்கு முன்பு அதிமுக ஆட்சியில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களது கருத்துக்களை கேட்டு, உச்ச நீதிமன்றம் சென்று காவிரி நதி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்ப்பை பெற்றோம். ஆனால், அந்த தீர்ப்பைக்கூட இந்த அரசு காப்பாற்ற முடியாத ஒரு நிலையில் உள்ளது.

கர்நாடக அரசு அரசியல் கட்சிகளையும், விவசாயிகளையும் மதிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கம் செயல்படுகிறதா என்று கேள்விக்குறியாக உள்ளது. கட்சி ஆரம்பித்து இரண்டரை வருடம் தான் ஆகிறது. இந்த அரசாங்கத்திற்கு எந்த அனுபவமும் கிடையாது. காவிரி பிரச்சனை குறித்து இவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

திமுக, அதிமுக ஆட்சியில் காவிரி விவகாரம் குறித்து எத்தனை போராட்டம் நடத்தினோம் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மேகதாது அணை கட்டக்கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு குரலை தெரிவித்து வருகின்றனர். இந்த வரலாறு தெரியாத ஒரு ஆட்சி தான் தவெக ஆட்சி” எனத் தெரிவித்தார்.

Related

“டம்மி முதல்வரால் காவிரிக்கு இந்த நிலைமை: தஞ்சை போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!”