சென்னை, ஆக.7-
தமிழக அரசின் 2026–27 வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், ஏற்கனவே பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே மீண்டும் தொகுத்து அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கரும்புக்கு ஒரு டன்னுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், உழவர் உரிமை அட்டையின் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி உள்ளிட்ட எந்த நலத்திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் புதிய திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றும் விமர்சித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து பணிகளையே பெயர் மாற்றி தற்போதைய அரசு அறிவித்துள்ளது என்றும், அப்போது மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நீர்நிலைகள் பயன்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக வேளாண் பட்ஜெட்டுக்குப் பிறகு மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர்கள் அறிவிக்கும் திட்டங்களையே, இந்த முறை வேளாண் பட்ஜெட்டுடன் இணைத்து அறிவித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், காவிரி – மேகதாது விவகாரம் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், பயிர்க்கடன் தள்ளுபடி, கொரோனா கால விவசாய நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். நெல் கொள்முதல் மற்றும் சேமிப்பு தொடர்பாகவும் விமர்சித்த அவர், நெல் சேமிப்புக்கான நிரந்தர கிடங்குகள் அமைப்பதற்குப் பதிலாக தார்பாய்கள் வழங்கப்படுகின்றன என்றும், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப உரிய கட்டமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காவிரி நீர் விவகாரத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அதன் பிறகு என்னுடைய தலைமையில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு உரிய தீர்ப்பைப் பெற்றோம் என்றும், தற்போது நீதிமன்றம் வழங்கிய உரிய நீரைப் பெற தமிழக அரசு போதிய முயற்சி எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக முதல்வர் கர்நாடக செல்ல நினைத்தார். ஆனால் கர்நாடக முதல்வர் வர வேண்டாம் என கூறிவிட்டார். முதல்வரின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழக மக்கள் நலன் சார்ந்த விஷயமாகவே இருக்க வேண்டும் என தெரிவித்தார். வேளாண் பட்ஜெட்டை பொருத்தவரையில் மதிப்பெண் அளிக்க வேண்டும் என்றால் நேற்றைய தினம் பூஜ்ஜியம் என கூறினேன். இன்று மைனஸ் பூஜ்ஜியம் தான் தர வேண்டும் என்றார்.
செய்தியாளர் சந்திப்பு பிறகு தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வாகனத்தில் ஏறுவதற்கு பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தில் ஏற முயன்றார். இதன் பிறகு உடனிருந்தவர்கள் கூறிய பிறகு அங்கிருந்து நகர்ந்து அவருடைய வாகனத்தில் ஏறிச் சென்றார்.
இதன் பின்னர் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் விஞ்ஞான ரீதியாக வார்த்தை அலங்காரம் கொண்டு மக்களை எப்படி ஏமாற்றினார்களோ அதே போல தற்போதைய தமிழக வெற்றி கழகம் அரசு விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.
தேர்தல் முன்பாக பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் எனக் கூறிவிட்டு தற்போது அதனை செய்ய மறுக்கிறது. நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பதிலுரையின் போது பயிர் கடன் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவிப்பார் என கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.