வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் பகுதி, 48-வது வார்டு, மண்டலம் 5-க்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், மின்சாரம் வழங்கப்படும் நேரங்களில் அதிக மின்னழுத்தத்துடன் மின்சாரம் வருவதால், வீடுகளில் உள்ள ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்கள் சேதமடைந்ததாகவும், தொலைக்காட்சியும் வெடித்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
ஒரு வாரமாக மின்சாரப் பாதிப்பு நீடிப்பதால், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை வைத்துக்கொண்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், குடிநீர் கிடைக்காமலும், கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குத் தேவையான தண்ணீர் இல்லாமலும் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர், ராயபுரம் கல்லறைச் சாலை பகுதியில் திரண்டு, மின்சார வாரிய அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் அருள்மணி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மின்சாரம் மீண்டும் வழங்கவும், சீரான மின்னழுத்தத்தில் மின்சாரம் கிடைக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்தார்.
இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரு வாரமாக நீடிக்கும் மின்சாரப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.