சென்னை: விஜய், ஆதவ் அர்ஜுனா மீது உச்சநீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பின்னர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் அண்மையில் வெளியிட்ட கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், கரூர் சம்பவம் தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகள் பொறுப்பற்றவை என்றும், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கரூர் சம்பவம் குறித்து பேசிய விஜய், தேர்தலை கருத்தில் கொண்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் பொய்யான தகவல்களை பரப்பியுள்ளதாக ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டினார். கரூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், அந்த தொகுதியில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாக இந்த கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கரூர் சம்பவம் நடைபெற்றபோது அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உயிர்களை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், அவரது செயல்பாட்டை அரசியல் தெரிந்தவர்களும், மனசாட்சி உள்ளவர்களும் பாராட்டியதாகவும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். அதேநேரத்தில், ஆபத்து நேரத்தில் விஜய் முகத்தை மறைத்தபடி விமானத்தில் வந்து திரும்பிச் சென்ற சம்பவத்தை மக்கள் மறக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
கரூர் வழக்கில் திமுக ஆட்சிக்காலத்திலேயே சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், அப்போது நியமிக்கப்பட்ட அதே அதிகாரியையே தற்போது தமிழ்நாடு வெற்றிக் கழகம் தனது உளவுத்துறை (Intelligence) பொறுப்பில் நியமித்திருப்பது, அன்றைய விசாரணை நடுநிலையாக நடைபெற்றதற்கான சான்று என்றும் அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் கோரியதன் பேரில் சிபிஐ விசாரணைக்கும் அனுமதி வழங்கப்பட்டு, தற்போது அந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, சிபிஐ விசாரணை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை பாதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டினார். மேலும், ஆதவ் அர்ஜுனா (A2), புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் (A3), ஜெகதீஷ் பழனிச்சாமி உள்ளிட்டோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
இதனால், உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் Implead Petition தாக்கல் செய்ய இருப்பதாகவும், ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு (Contempt Proceedings) நடவடிக்கை எடுக்கவும் தனி மனு தாக்கல் செய்யப்படும் என்றும் ஆர்.எஸ். பாரதி அறிவித்தார்.
மேலும், ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினர் மீது கேரளாவில் லாட்டரி முறைகேடு தொடர்பாக ரூ.928 கோடி மதிப்பிலான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அவரது மனைவியும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக உள்ளதாகவும் கூறிய அவர், இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள் திமுக மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதற்கு சட்டரீதியான பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, அவதூறு வழக்குகளில் கைது செய்வது தமிழக அரசியல் வரலாற்றில் வழக்கமல்ல என்றும், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலங்களிலும் திமுக தலைவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவதூறு வழக்குகளில் கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார். ஆனால், தன்னுடைய தொகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், இதையும் சட்டரீதியாக சந்திப்போம் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகவும், தினமும் கொலை, பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர், திமுகவை வழக்குகள் மூலம் அச்சுறுத்த முடியாது என்றும், பல்வேறு அரசியல் சோதனைகளை கடந்து வந்த இயக்கம் திமுக என்றும் கூறினார். திமுக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பல்வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களை விஜய் தனது கட்சியில் இணைத்துள்ளதாக விமர்சித்தார். அத்தகையவர்களே எதிர்காலத்தில் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்துவார்கள் என்றும், சூழ்நிலை மாறினால் அவர்கள் மீண்டும் வேறு கட்சிகளுக்குச் செல்லக்கூடியவர்கள் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் ரமேஷ் திமுகவை "பாப்பா மாடல்" என்று விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டபோது, அதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், "கண்ணீர் துளிகள்" என்ற பெயரிலேயே பெரியார் இந்த இயக்கத்தை குறிப்பிட்டிருந்தாலும், 77 ஆண்டுகளாக மக்கள் ஆதரவுடன் திமுக வளர்ந்து வந்துள்ளது என்றும் ஆர்.எஸ். பாரதி கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.