சென்னை: தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை, திமுக எஸ்சி எஸ்டி பிரிவு அமைப்பாளர்  சிவசங்கர் சந்தித்தார்.

தாராபுரம் தனி தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த பி. சத்யபாமா கடந்த மே 25 ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார்.  இதனால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் பி. சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்றிருந்தார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி. இந்திராணி 64,373 வாக்குகளைப் பெற்றார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட கௌரி சித்ரா 45,284 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 

சென்னை அறிவாலயம் வந்துள்ள திமுக எஸ்சிஎஸ்டி அமைப்பாளர் சிவசங்கர் ஆதரவாளர்கள்.

இந்த நிலையில் மீண்டும் தொகுதியைப் பிடிக்க அதிமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இடைத்தேர்தலில் திமுக வெற்றியைப் பெற முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் வேட்பாளரை களம் இறக்குவது குறித்து திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

தாராபுரம் தொகுதி தனித் தொகுதி என்ற நிலையில் திமுக எஸ்சி எஸ்டி பிரிவு அமைப்பாளர்  சிவசங்கர் அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

சிவசங்கருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற நிலையில் இன்று அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சிவசங்கர் தனது ஆதரவாளர்களுடன் சென்னை அறிவாலயத்துக்கு வந்திருந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related

“தூத்துக்குடி காவல் மரணமடைந்த இளைஞரின் இறப்பு குறிப்பு வெள்ளை அறிக்கை வேண்டும்: சரத்குமார்!”