அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டதை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய்யே உருவ கேலி செய்யும் விதமாக பேசியது பொறுப்பற்ற செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (செப்டம்பர் 7) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரை இடம்பெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்து, சிறந்த முறையில் செயல்பட தேவையான அனைத்து முடிவுகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என பேசியிருந்தார்.

மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பேசியதோடு, எதிர்க்கட்சியான தி.மு.க-வை கடுமையான சாடினார். குறிப்பாக, சட்டம் - ஒழுங்கு குறித்து பேசும் முன் திமுக தனது ஆட்சியை கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்றும், அதுபற்றி பேச தி.மு.க-வுக்கு தகுதியில்லை என்றும் விமர்சித்தார். இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையில் எந்த பதிலும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.

மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.

முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும், சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும்கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டதை விபரமறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானதல்ல.

அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும், அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால், அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவ கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.சட்டமன்றத்தை எந்த வகையிலும் தனி மனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரிகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.

ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வதை யாராக இருந்தாலும் ஏற்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”