சென்னை, செப்.16-
மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்தை கண்டித்து மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மதுரை ஆனையூர் கூடல் புதூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் கடந்த ஏழாம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். 11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவரின் உடல் முட்புதர்கள் நிறைந்த குட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறி வருகின்றனர்.


மாணவர் இறந்து ஒரு வார காலம் ஆகியும், அவரது உடலை வாங்க தாயார் யோகலட்சுமி மறுத்து வருகிறார். அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், மகன் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக காவல் துறை எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில், மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகம் முன்பாக போராட்டம் உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை காவல் துறையினர் மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர்.
சாலையில் தவறி விழுந்த பெண்ணின் கழுத்தை பெண் காவலர்கள் காலால் மிதிக்கின்ற கொடூரமான காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.
காவல் துறையினரின் இத்தகைய கொடூரமான தாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் முதல்வர் பொறுப்பில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.


போராடிய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாணவரின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார். 
வேல்முருகன்- தவாக
மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு முழுமையான நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர் தமிழ்ச்செல்வன் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை கேட்டு ஜனநாயக வழியில் போராடியவர்களை, காவல் துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் மீது காவல் துறையினர் வன்முறையை ஏவுவது, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் நிவேதா மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தவறு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையின் அத்துமீறல் குறித்த குற்றச்சாட்டுகளை மூடிமறைக்காமல், வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்.


அதேவேளையில், மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பான உண்மை முழுமையாக வெளிச்சத்துக்கு வர வேண்டும். இந்த வழக்கில் தற்போதைய விசாரணை குறித்து குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக நேரடியாகத் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மக்களின் கேள்விக்கு அதிகாரத்தின் அடக்குமுறை பதிலாக இருக்கக்கூடாது. உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதே அரசின் கடமை. மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு முழுமையான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”