சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகளின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இடதுசாரிகளின் ஒருங்கிணைப்பு குழு தொடங்குவது தொடர்பாக சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சண்முகம், வீரபாண்டியன், பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை மாநில அலுவலகத்தில் சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம்எல் ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்கள் கூடிய ஆலோசித்தோம். ஏற்கனவே சிபிஎம் அலுவலகத்தில் இரண்டு முறை கூடி ஆலோசனை செய்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் தமிழ்நாட்டில் தமிழக நலம் சார்ந்த இயக்கங்களையும், போராட்டங்களையும் அதிகப்படுத்த வேண்டும். இடதுசாரி கட்சிகள் மட்டுமல்ல ஜனநாயக சக்திகளையும் எதிர் வரும் காலத்தில் அணி திரட்ட உள்ளோம்.
நாட்டை எதிர்காலத்தில் இடது பக்கம் திருப்புவதற்கு தொலைநோக்கு பார்வையுடன் இணைந்துள்ளோம். இந்த இயக்கத்தை இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலோடு ஒப்பிட வேண்டாம். Genz இளைஞர்களிடம் இடது சிந்தனையை தருவது தான் எங்களது இடது அணியின் நோக்கம், இடதுசாரிகள் வளர்வது இந்தியாவிற்கும் உலகத்திற்கும் ஆபத்து, அதன் தாக்கத்தை உணர்த்துவதற்கு தான் இந்த அணி,தேர்தல் நேரத்தில் எப்படி செயல்படுவோம் என தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்போம். நாளை நடைபெறும் சட்டப்பேரவையில் தமிழ்தாய் வாழ்த்து தான் முன்னுரிமை தர வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய சிபிஐ எம்எல் மாநில செயலாளர் பழ ஆசைத்தம்பி, நீண்ட காலமாக சிறுபான்மை, பெரும்பான்மையை அடக்கி ஒடுக்கி ஆண்டு கொண்டுள்ளது.. இதற்கு இடதுசாரிகள் தான் மாற்று. இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள மூன்று இடதுசாரி கட்சிகளும் அகில இந்திய அளவில் ஒன்றாக இணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளை, மக்கள் போராட்டங்களை தீர்வு காண இடதுசாரி அணி ஒன்று தேவை என்பதை உணர்ந்து மூன்று கட்சிகளும் இரண்டாவது முறையாக இன்று ஒன்று கூடி பேசினோம். ஒரு பொது மேடை, விரிந்த மேடையை உருவாக்க உள்ளோம். இடது சாரியை சார்ந்துள்ள இளைஞர்கள் ஒன்று சேர நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களின் உயிரோட்டமான கோரிக்கைகளை தமிழ்நாடு மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் வகையிலும், இடதுசாரி அரசியலை தமிழ்நாட்டின் முன்னெடுத்து செல்லும் வகையிலும் மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவுக்கு வந்துள்ளோம்.
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. சிபிஐ,சிபிஎம், சிபிஐ எம் எல் கட்சிகளில் தலா நான்கு பேர் என 12 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. ஜூலை மாதம் 10 ஆம் தேதி இந்த இயக்கத்தில் உள்ள அணிகளின் மாநில நிர்வாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம். முடிவு செய்யப்படவுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் இடதுசாரி கட்சிகளின் சார்பில் அனைவரும் சேர்ந்து பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம் இடம் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இது தேர்தலுக்கான அணி அல்ல, தமிழ்நாட்டின் நலன், முன்னேற்றம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிரச்சனைகளின் மீது சேர்ந்து போராடி, செயல்பட உருவாக்கப்பட்டுள்ள அணி இது, தேர்தலுக்கான அணி அல்ல. வெள்ளை அறிக்கை 200 பக்கத்திற்கு மேல் வந்துள்ளது, அதை முழுமையாக ஆய்வு செய்து இன்று மாலை இடதுசாரி கட்சிகளின் சார்பில் அறிக்கை வரும். ஏற்கனவே நான்கு பேர் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தார்கள், நேற்று விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார்.
தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குள் ராஜினாமா செய்வது ஏற்புடையது அல்ல. சொந்த காரணத்திற்காக ராஜினாமா செய்வது வேறு, தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குள் ராஜினாமா தவிர்க்கப்பட வேண்டியது ஏற்கப்படும் விஷயம் அல்ல.பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் உண்மையாக வேதனை தரக் கூடியவையாக உள்ளன. இதற்கு மிக முக்கிய காரணம் போதை கலாச்சாரங்கள்.ஆளும் கட்சிக்காரனா, எதிர்க்கட்சி காரனா என பார்க்காமல் தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தமிழக வெற்றிக்கழகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட மதம் சார்ந்த கருத்துக்களை கூறும் வந்தே மாதரத்தை பாடுவது தவறானது.
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சட்டப்பேரவை தொடங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். திமுக கூட்டணியே இல்லை என சண்முகம் சொல்வதற்கு சண்முகம் யார் என கொங்கு ஈஸ்வரனின் பேச்சுக்கு சண்முகம் பதில் கொங்கு ஈஸ்வரன் ஒருமையில் பேசியதை, பன்மையில் பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை, அவரது தகுதியை அது வெளிப்படுத்துகிறது.
நாங்கள் எல்லாம் சேர்ந்து இருந்ததற்கு பெயர்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இடதுசாரிகள், மதச்சார்பற்ற சக்திகள் பலரும் வெளிவந்த பிறகு அந்த கூட்டணி என்பது இல்லை, அப்படி திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி இருக்கிறது என்றால் அதை கூறுபவர்கள் தான் நிரூபித்து காட்ட வேண்டும் என தெரிவித்தார். மூன்று கட்சியும் ஒரே கட்சியாக மாறுமா என்ற கேள்விக்கு உங்கள் ஆலோசனைகளை எடுத்துக்கொள்வோம் - சண்முகம், அதை நோக்கித்தான் எங்கள் பயணம் - வீரபாண்டியன் என தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.