செங்கல்பட்டு: முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரியை வழக்கை, அவரது மனைவி சங்கீதா திரும்பப் பெற்றார். இதனால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
முதல்வரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தெரிவித்தார்.
விவாகரத்து மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதால், வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம். வாபஸ் பெறுவதற்கு முதல்வர் விஜய் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. நீதிபதி சுஜாதா, ‘எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் வழக்கு தொடரலாம்’ என அனுமதியளித்து, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “முதலமைச்சர் விஜய்க்கும் தனக்கும் 1998ஆம் ஆண்டு லண்டனில் திருமணத்துக்கான பதிவு செய்யப்பட்டது. பின்னர், 1999ஆம் ஆண்டு இந்து முறைப்படி ராஜா முத்தையா மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தோம். ஆரம்பத்தில் தனது கணவர் விஜய் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்து கொண்டார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் செல்லும்போது லண்டனில் உள்ள எனது குடும்பத்தையும் அடிக்கடி சந்தித்து வந்தேன். இருவருக்கும் இடையே பிரச்சினைகள் இருந்தாலும் ஒன்றாகவே வசித்து வந்தோம்.
கடந்த 2021இல் விஜய்க்கு பிரபல நடிகையுடன் தொடர்பு இருப்பதை அறிந்து மிகுந்த மனவேதனை ஏற்பட்டது. இருவருக்குமான தொடர்பு குறித்து கேட்டபோது தொடர்பை துண்டித்துவிடுவதாக கூறிய விஜய், நடிகையுடனான உறவை தொடர்ந்து வந்தார். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சமரசம் செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இந்த சம்பவங்களுக்கு பின், விஜய் என்னை புறக்கணிக்கும் வகையில், என்னிடமிருந்து பிரிந்து வேறு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அந்த நடிகையுடன் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட படங்களை சமூக வலைதளங்களில் அந்த நடிகை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதற்கு விஜய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது எனக்கு மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. அதற்கு விஜய் வருத்தம் தெரிவிக்காமல் எனக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுத்தார்.
இனிமேலும் மனவேதனையுடன் திருமண உறவை தொடர முடியாது என்பதால், இந்த விவாகரத்து முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன். வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை நீலாங்கரை வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும். விஜயின் வருமானத்தில் இருந்து போதுமான ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கானது, ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு ஏற்கப்பட்டு, இருவரும் ஆஜராக உத்தரவிட்டு ஜூன் 15ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் முடிந்து விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சரான பின், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், காணொளியில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் எனவும் அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 07ஆம் தேதியான இன்று இந்த வழக்கு நீதிபதி சுஜாதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொளியில் இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். லண்டனில் வசித்து வரும் சங்கீதா சுமார் 12 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். முதலமைச்சர் விஜய் தரப்பில் பிற்பகல் ஆஜராக அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சங்கீதா ஆஜராகி தனது விவாகரத்து வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்பதால், வழக்கை திரும்பபெற அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து முதலமைச்சர் விஜய்க்கு ஏதாவது ஆட்சேபம் உள்ளதா? என நீதிமன்றத்தின் சார்பில் கேட்கப்பட்டது.
ஆனால், வழக்கு திரும்ப பெறுவதால் எந்த ஆட்சேபமும் இல்லை என முதலமைச்சர் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி சுஜாதா, வழக்கை திரும்ப பெற அனுமதித்து வழக்கை முடித்து வைத்தார். மேலும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் சங்கீதா புதிதாக வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம் எனவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.