சென்னையில் ’போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் விஜய், மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றார்.

அப்போது கையை உயர்த்தியபடி, ”போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்கேற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என முதலமைச்சர் விஜய், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றார்.

தொடர்ந்து போதைப்பொருள் உற்பத்தி தடுப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்ற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தை சிறப்பாக செயல்படுத்திய ஈரோடு மாவட்டம் செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான இரண்டாம் பரிசு தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு வெற்றிச் சான்றிதழுடன் 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

முன்னதாக தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல், உற்பத்தி மற்றும் அதன் விற்பனை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் வகையில் போதைப்பொருள் தடுப்புப் படை  உருவாக்க தமிழ்நாடு அரசு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி, மாநிலம் முழுவதும் ரூ. 264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன்கீழ் 65 சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்படும் போதைப்பொருள் தடுப்புப் படைக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமை வகிப்பார் எனவும், அவருக்கு உதவியாக ஒரு காவல்துறைத் தலைவர், மற்றும் 2 காவல் கண்காணிப்பாளர்கள் பணியாற்றுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன்,  உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  தீரஜ் குமார், பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன்,காவல்துறை தலைமை இயக்குநர்  மகேஷ் குமார் அகர்வால், அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல்துறை இயக்குநர்  கி.சங்கர், சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். மாலதி ஹெலன், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”