காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செமிகண்டக்டர் உற்பத்திப் பூங்கா: தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் துறையில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதுடன், இத்துறையில் மாநிலத்தின் பங்களிப்பை கணிசமான அளவில் உயர்த்தும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா (Semiconductor & Electronics Manufacturing Park) அமைக்கப்படும்.
சிப்காட் நிறுவனம் மூலம் ரூ.175 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இப்பூங்காவில், செமிகண்டக்டர் துறையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D – Research and Development) வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் செமிகண்டக்டர் துறையில் சுமார் ரூ.2,000 கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், சுமார் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கோயம்புத்தூரில் ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையம்: நிதித் தொழில்நுட்பப் புதுமைகளுடன் கூடிய டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (Coimbatore FinTech Hub) அமைக்கப்படும்.
பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இம்மையத்தில் உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான வசதிகள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வசதிகள் உள்ளிட்ட அதிநவீன கட்டமைப்புகள் இடம்பெறும். இதன்மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிதி மற்றும் நிதிநுட்பத் துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகை ஏற்படும்.
திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம்: 2026-27ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் (Multi Model Logistics Parks) மற்றும் உலர் துறைமுகங்கள் (Dry Ports) அமைத்து முதலீடுகளை ஈர்க்க அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டப் பகுதிகளில் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அத்திட்ட அறிக்கையின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் “பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் (Multi Model Logistics Hub)” ஒன்று அமைக்கப்படும்.
இந்த மூன்று முக்கியத் திட்டங்களும் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், செமிகண்டக்டர், நிதிநுட்பம், உற்பத்தி மற்றும் சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளன.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.