“வெற்றிப் பயணம்” திட்டத்தின் கீழ் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் , மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, மகளிருக்குப் பெருமளவில் பயனளித்திடும் வகையில் “வெற்றிப் பயணம்” திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் சென்னை, கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணச்சீட்டை வழங்கித் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 24.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூக நீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அதனடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள 7 போக்குவரத்துக் கழகங்களின் மாநகர், நகர்புற சாதாரணப் பேருந்துகள் மற்றும் மலைப் பகுதிகளில் 40 கி.மீ. வரை மட்டுமே மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்துவந்த நிலையில், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து, இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுப்படுத்தப்பட்டு, மொத்தமாக 12,695 பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 12,695 பேருந்துகள் வெற்றிப் பயணத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு, 1,68,500 நடைகள் (Singles) இயக்கப்படும். இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 இலட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தால், தமிழ்நாடு முழுவதும் மகளிர் எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மேலும், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் மற்றும் திருநர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கும் கட்டணமின்றிப் பேருந்துகளில் பயணிக்க இயலும்.
மாநிலத்தில், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள மாதிரி நன்னடத்தை விதிமுறையைக் கருத்தில் கொண்டு, தேர்தல் நடைமுறை நிறைவடையும்வரை இவ்விரண்டு மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது.
இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், அரசு தலைமைக் கொறடா ரா. சபரிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், போக்குவரத்துத் துறை செயலாளர் இல. நிர்மல்ராஜ், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.