சென்னை: கோதாவரி - காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கும், தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கும் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்: தமிழ்நாடு மாநிலம் இயல்பாகவே மேற்பரப்பு நீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்தே உள்ளது.
மாநில அரசால் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்கிறது.
தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாகக் கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கான அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களான, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. அந்த மாவட்டங்களின் அதிகரித்து வரும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி – காவிரி– வைகை– குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியம். இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுப்பதாய் அமையும்.
இந்தப் பெரிய திட்டத்தின் முதற்கட்டமாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை , கோதாவரி - பெண்ணாறு – பாலாறு – வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. இத்திட்டத்தினால் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குப் பயனளிக்கும் என்றாலும், தற்போது தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் உள்ள சீரமைப்பு வழியானது, காவிரி ஆற்றுக்கு சில கிலோ மீட்டர் முன்னதாகவே முடிவதால் அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி – காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.
இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகப் பொருளாதார நன்மைகளைக் கருத்தில்கொண்டு, கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக (fast-track) செயல்படுத்திட, அதற்கு ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்ற அந்தஸ்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், உத்தரவாதமான நிதி ஒதுக்கீடு மற்றும் குறித்த காலத்தில் திட்டத்தை முடிப்பது ஆகிய நோக்கத்துக்காக மத்திய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் ஒரு பிரத்யேக 'சிறப்பு நோக்கு அமைப்பை' உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம்.
இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்புடன் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
எனவே, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கும் (NWDA) பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக நீங்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி, தென்னிந்தியாவின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது சிறப்பான நீர் வளங்களைச் சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவது என்ற தேசிய குறிக்கோளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.