குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில், முதற்கட்டமாக “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்பு

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நமது அரசால் பெண்கள் பயன்பெறும் வகையிலும், அவர்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதுவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றிற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நமது அரசு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு “வெற்றித் தொலைநோக்குத் திட்ட ஆவணம்” (Vetri Vision Document) வெளியிட்டுள்ளது. அந்தத் திட்ட ஆவணத்தின் அடிப்படையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் அடுத்துவரும் முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் ஆண்டுகளுக்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றும்.

கடந்த நான்கு மாதங்களாக வளைகுடாப் பகுதியில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி வருவதாலும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொதுமக்கள் தங்களது வருவாயிலிருந்து கூடுதலான தொகையினைச் செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, நிதிநெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், எரிவாயு சிலிண்டருக்காகச் செலவழிக்கப்பட்டு வரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இவ்வரசு முடிவு செய்துள்ளது.

எனவே, குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில், முதற்கட்டமாக “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டப் பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து, சிலிண்டரைப் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பட்டியல் பெற்று, சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 30 இலட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள்.

அதாவது, ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும்.

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”