தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரியவில்சன். தவெகவின் கொள்கை தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தும், அண்ணா மற்றும் எம்ஜிஆரை சுட்டிக் காட்டியும் பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர் மரியவில்சன்.
பட்ஜெட் உரை:
தவெக தலைவர் விஜய் தலமையிலான அரசு, ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சொன்னதை மட்டுமின்றி சொல்லாதவற்றையும் இந்த அரசு நிறைவேற்றித் தந்துள்ளது. உண்மையான சமூக நீதியே இந்த அரசின் கொள்கை. தவெகவின் வெற்றி என்பது ஒரு கட்சிக்கான வெற்றி அல்ல. அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றி.
தமிழ்நாட்டில் வரும் 2031-க்குள் 1.31 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. பொதுப்பணித் துறைகளில் டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிய மற்றும் வளர்ந்து வரும் ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அரசின் டெண்டர்கள் ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்து வந்தது. அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டட அனுமதியில் உள்ள பழைய நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. கட்டட அனுமதியில் நிலவி வந்த ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றார்.மேலும், மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசா தொடவும் மாட்டோம். தொட விடமாட்டோம். மற்றும் இதுவரை தொட்டவர்களையும் விட மாட்டோம்.
மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் சூப்பர் சேப்ப்டி திட்டம் முதற்கட்டமாக 10 ஆயிரம் பள்ளிகளில் அமல்படுத்தப்படும். இதற்காக 2026-2027-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள் திட்டத்தின் கீழ் பள்ளிகளின் உட்கடமைப்புகளை மேம்படுத்த ரூ.125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிப் பாடத்திட்டதை மறுசீரமைப்பு செய்ய ரூ. 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 3714 பள்ளிகளை நவீனமயமாக்கக ரூ 2,132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.
பள்ளிகளில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நூலகங்களை மேம்படுத்த ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தமாக பள்ளி கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். மேலும் 11-ம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலுடன் கூடிய சைக்கிள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.10,000 கோடியில் 1 லட்சம் மாணவர்கள் தங்குவதற்காக விடுதிகள் கட்டப்படும்.
மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும். உயர் கல்வித்துறைக்கு ரூ. 8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் ஐடிஐ மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். 2031-க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப பயிற்சி சென்னை ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிலாளர் நலத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 2022 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு 17,150 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.
மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும். 8 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தேசிய அளவில் சாதனை படைத்தவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து பள்ளிகளிலும் பள்ளி முடிந்த பிறகு தினமும் 1 மணி நேரம் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்கான விளையாட்டு உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். இந்த பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும், ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும், 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோர் சிகிச்சை மையங்கள் திறக்கப்படும். தமிழகம் முழுவதும் 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கருவுற்ற பெண்களுக்கு சேவை, மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.