தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் மின் நுகர்வைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகத் துறைகளில் உலகத்தரம் வாய்ந்த, மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய மின்கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.
ரூ.33,066 கோடியில் மின் தொடரமைப்பு மேம்பாடு: மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை உள்ளிட்ட முக்கிய மின் நுகர்வு மையங்களுக்கு திறம்படக் கொண்டு செல்லும் வகையில் மின் தொடரமைப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இதற்காக ரூ.33,066 கோடி மதிப்பீட்டில் “தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” (Tamil Nadu Transmission Improvement Scheme) செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுவதுடன், அவற்றுடன் தொடர்புடைய 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகளும் அமைக்கப்படும். மேலும், ஏற்கனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்.
தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் புதிய அனல்மின் நிலையம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வரும் நிலையில், காற்றாலை, சூரிய மின்சாரம் மற்றும் மின்கல சேமிப்பு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் அனைத்து நேரங்களிலும் சமச்சீராகக் கிடைப்பதில்லை. எனவே, மின் தேவை அதிகமாக இருக்கும் காலங்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்க அனல்மின் உற்பத்தியை நம்ப வேண்டிய நிலை உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய அனல் மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதில் பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின் உற்பத்தித் துறையில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போது தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 5 நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன் 1,050 மெகாவாட் ஆகும். 1979-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வரும் இந்த அலகுகளை, நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப படிப்படியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் தற்போதுள்ள 5 அலகுகளுக்குப் பதிலாக, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் தலா 800 மெகாவாட் திறன்கொண்ட 2 புதிய அலகுகளுடன், மொத்தம் 1,600 மெகாவாட் திறன் கொண்ட New Supercritical Thermal Power Station ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
சென்னை மின் பகிர்மானக் கட்டமைப்பு மேம்பாடு: சென்னை மாநகரின் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், பருவமழைக் காலங்களில் வெள்ளம் காரணமாக ஏற்படும் மின்தடைகள் மற்றும் கோடைக்காலங்களில் அதிகரிக்கும் மின் தேவையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்காகவும் மின் பகிர்மானக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.
இதற்காக ரூ.1,762 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் கீழ் 36 புதிய 33/11 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகள் நிறுவப்படுவதுடன், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், Pillar Box, Circuit Breakers உள்ளிட்ட மின் உபகரணங்கள் மாற்றப்படும்.
இதன்மூலம் தமிழ்நாட்டின் மின் தொடரமைப்பு மற்றும் பகிர்மானக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, அதிகரித்து வரும் மின் தேவையை திறம்படக் கையாள்வதற்கும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.