சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சிவசங்கர், இயக்குநர் அட்லி சிறந்த திரைப்படக் காட்சிகளை எடுத்து ஹிட் கொடுப்பார். அதுபோல எங்கள் ஆட்சியின் திட்டங்களை எடுத்துக்கொண்டு தற்போது ஆட்சி நடத்தப்படுகிறது என்று விமர்சித்தார்.
மேலும், காலங்கள், காட்சிகள் மாறும்; அதற்கு ஏற்றபடி செங்கோட்டையன் இங்கு பேச வேண்டும் என்று சிவசங்கர் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்த் திரையுலகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர். ஆனால் முழு அரசியல்வாதியான சிவசங்கர் அட்லியை குறித்து பேசியது ஆச்சரியமாக உள்ளது. அட்லிக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம்? காலமும் காட்சியும் ஏற்கனவே மாறிவிட்டது. அன்றும், இன்றும், என்றும் மாநில உரிமை மற்றும் மொழி உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் சிவசங்கர், பராசக்தி திரைப்படத்திற்காக கருணாநிதி எழுதிய வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. சட்டப்பேரவையில் பேசுவதை பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதை வார்த்தை விளையாட்டு என்று கூறுகிறோம். இன்னும் பல சுவையான செய்திகளை வரும் நாட்களில் ஆளுங்கட்சியினருக்கு சொல்வேன் என்றார்.மேலும், ஆக்கபூர்வமான ஆட்சியை வழங்கும் பணியை மட்டும் பாருங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வாக்கு வித்தியாசம் தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்து பெற்ற வாக்குகளையும், பல கட்சி கூட்டணியுடன் திமுக பெற்ற வாக்குகளையும் ஒப்பிடுவது பொருத்தமானது அல்ல என்றார்.
இதற்கு பதிலளித்த சிவசங்கர், அமைச்சரின் கருத்துகள் சரிதான். ஆனால் எங்களோடு வாக்குகள் பெற்றவர்களின் உதவியுடன்தான் ஆட்சி நடைபெறுகிறது. வரும் காலத்தில் தனித்து நிற்கத் தயாராக இருக்கிறோம் என்று கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இறுதியாக அமைச்சர் ராஜ்மோகன், எங்களுக்கு எதிராக பேசுவதாக நினைத்து தமிழக மக்களுக்கு எதிராக யாரும் பேசுவதை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.