சென்னை, வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் போக்குவரத்து சிக்னல் அருகே மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், ஒன் வேயில் விதிமுறையை மீறி வந்த அரசு மாநகரப் பேருந்தை தலைமை போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
மூலக்கொத்தளம் சிக்னல் பகுதியில் கார்த்திகேயன் என்ற தலைமை போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாலை நேர நெரிசல் காரணமாக ஏராளமான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து சென்றன.
இந்த நிலையில், கருவாட்டுக் கடை பகுதியில் இருந்து எதிர்திசையில் செல்லும் வகையில் 157-ம் எண் அரசு மாநகரப் பேருந்து ஒன் வே சாலையில் நுழைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த தலைமை காவலர் கார்த்திகேயன், சாலையின் நடுவே சென்று பேருந்தை தடுத்து நிறுத்தினார்.
மற்ற வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறும்போது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், அரசு பேருந்தாக இருந்தாலும் போக்குவரத்து விதிகளை மீறி ஒன் வேயில் செல்ல அனுமதிக்க முடியாது என காவலர் அறிவுறுத்தினார். மேலும், பேருந்தை மாற்றுப் பாதையில் செல்லுமாறும் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான். அரசு பேருந்தாக இருந்தாலும் ஒன் வேயில் செல்வது மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஒன் வேயில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் அதில் பணியாற்றிய நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விதிமுறைகளை மீறிய அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி, மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்திய தலைமை போக்குவரத்து காவலர் கார்த்திகேயனின் நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். “அரசு பேருந்தாக இருந்தாலும், தனியார் வாகனமாக இருந்தாலும் போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் சமம்” என்பதை காவலரின் நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.