சென்னை: தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனர். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையாற்றினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் வணக்கம் எனத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். அப்போது, 'ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்' என்ற அண்ணாவின் உரையை குறிப்பிட்டு பேசினார். மேலும், அவர் பேசியதாவது: "தமிழ்நாடு அரசியலில் வரலாற்று புரட்சி செய்யப்பட்டுள்ளது. கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பயனடையும் திட்டங்கள் நிறைவேற்றப்படும். நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" எனக் குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், பெரியார், அம்பேத்கர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசினார். பின்னர், ஜனநாயகத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார். தவெக கொள்கைத் தலைவர் வழியில் அரசு செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 74 ஆண்டு கால ஆட்சி வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை படைக்கப்பட்டு முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.
முதல்வரான பிறகு விஜய், பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த திட்டங்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதேபோல நிதி ஆயோக் கூட்டத்திலும் தமிழகத்தின் வளர்ச்சி குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் முதல்வர் விஜய், ஓசூர், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்டவை அதில் அடங்கும். மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது" என்று பேசினார்.
10.42 மணி வரை ஆளுநர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழாக்கத்தை சட்டப்பரேவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரன் வாசித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.