சென்னை

இனி ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கே அதிமுக ஐடி விங்கில் பதவி வழங்கப்படும்" என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாள்தோறும் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஜூலை 09 ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், சார்பு அணியின் நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான கே.பி.அன்பழகன், அதிமுகவைச் சேர்ந்த ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். இது அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 இருப்பினும், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிற அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட இபிஎஸ், சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கேட்டறிந்தார். அத்துடன், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் உள்ளிட்டவைக் குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன், அதிமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார்.

அப்போது பேசிய இபிஎஸ், "தவெகவினர் சமூகவலைதளம் மூலமாகவே கட்சியை வளர்த்து ஆட்சியைப் பிடித்தனர். தேர்தல் நேரத்தில் தவெக அளவிற்கு அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை. இனி ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கே அதிமுக ஐடி விங்கில் பதவி வழங்கப்படும்" என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், இன்னும் பல நிர்வாகிகள் இபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தவெக பக்கம் நோக்கி அதிமுக நிர்வாகிகள் செல்வதைத் தடுக்கும் வகையில் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை இபிஎஸ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”