ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழக தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் காணொளி வாயிலாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஜப்பானின் ஐச்சி-நகாயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி சார்பில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்று குவித்த தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீரர்களான வித்யா ராம்ராஜ், ராஜேஷ் மற்றும் விஷால் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தத் தொடரில் 400 மீட்டர் தடை ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டப் போட்டிகளில் இந்திய தடகள அணி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
இதில் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மிக முக்கிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில், இலக்கை வெறும் 54.75 விநாடிகளில் கடந்து அவர் வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதன் மூலம், கடந்த 1984-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தடகள ஜாம்பவான் பி.டி. உஷா படைத்திருந்த 42 ஆண்டுகால தேசிய சாதனையை (55.42 வினாடிகள்) வித்யா ராம்ராஜ் முறியடித்துள்ளார்.
பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்து, 55 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இந்த இலக்கை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, தடகளப் போட்டிகளில் சிறப்பான சாதனை படைத்த வித்யா ராம்ராஜுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் 4 பேரும் தங்களது இந்த எல்லையற்ற மகிழ்ச்சியை வீடியோ வெளியிட்டு பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், பேசிய வித்யா ராம்ராஜ், "நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்றுள்ளோம். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மைதானத்தில் எங்கள் வெற்றியின் காரணமாக இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும், தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதும் எங்களுக்கு அளப்பரிய பெருமையையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.