சிவகங்கை: கோவாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் சிவகங்கை மாவட்ட வீரர்கள் சிறப்பான சாதனை படைத்து, 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.

கடந்த ஜூன் 27 முதல் 29 வரை நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இந்த வெற்றியின் மூலம், வீரர்கள் நேபாளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வில்வித்தை போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என பயிற்சியாளர் தெரிவித்தார்.

போட்டியில் வெற்றி பெற்று இன்று சிவகங்கை வந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊர் முக்கியஸ்தர்கள், சக வீரர்கள், பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related

“தாம்பரத்தில் விசிக தலைவர் மணிவிழா மற்றும் பிறந்தநாள் மாநில அளவிலான தடகளப் போட்டி!”