சிவகங்கை: ஆசிய கபடிப்போட்டியில் இந்திய மகளிர் கபடி அணியில் விளையாடி தங்கப்பதக்கம் வென்றவரும், தற்போதைய கபடி பயிற்சியாளருமான கவிதா செல்வராஜ், சிவகங்கை திறந்தவெளி விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறும் கபடி வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில், கபடி விளையாட்டில் ஈடுபட்டு வரும் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விளையாட்டில் உள்ள குறைகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்வதுடன், புதிய யுத்திகள் மற்றும் நுட்பங்களையும் கவிதா செல்வராஜ் கற்றுக்கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தாமும் ஒரு விளையாட்டு வீரர் என்பதால், விளையாட்டு வீரர்களின் தேவைகளை நன்கு அறிந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

மேலும், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை உள்ளரங்கிலும், மேட்டிலும் விளையாடுவதன் மூலம் வீரர்கள் தங்களது திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்த அவர், அதற்கான பயிற்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.