அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என சி எஸ்.கே.கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே கேப்டனாக இருப்பது தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணம் என தெரிவித்தார். எம்.எஸ்.தோனிக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பை ரசித்து செய்து வருவதாகவும் கூறினார்.
அடுத்த 12 மாதங்களுக்கான இலக்கு குறித்து பேசிய அவர், எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு போட்டியையும் கவனத்தில் கொண்டு செயல்படுவதே தனது அணுகுமுறை என தெரிவித்தார். அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் தொடர்வீர்களா என செய்தியாளர் கேட்டபோது, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என ருதுராஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர், “ சிஎஸ்கேவில் தொடர வேண்டும்” என பதிலளிக்க, “அப்படியானால் அதுதான் பதில்” என ருதுராஜ் தெரிவித்தார்.
கடந்த சீசனில் சிஎஸ்கேவின் செயல்பாடு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில், அடுத்த சீசனில் வலுவாக திரும்புவோம் என ருதுராஜ் நம்பிக்கை தெரிவித்தார். 2008 முதல் சிஎஸ்கேவுடன் ரசிகர்கள் பல வெற்றிகளையும், சிறப்பான தருணங்களையும் கொண்டாடியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அணியின் கடினமான காலங்களிலும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
13 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமை குறித்த கேள்விக்கு, அவரது திறமை மிகவும் சிறப்பாகவும், உற்சாகமளிப்பதாகவும் ருதுராஜ் பாராட்டு தெரிவித்தார். சிஎஸ்கே அணிக்கு அடுத்த சீசனில் தலைமைப் பயிற்சியாளர் நிச்சயம் இருப்பார் என்றும், அதற்கான முடிவை எடுக்க இன்னும் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
அடுத்த சீசனில் சிஎஸ்கேவின் கம்பேக்கிற்காக ரசிகர்கள் காத்திருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.