கோவை: கல்வி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்றும் ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைகின்றன என்பதை வலியுறுத்தும் வகையில், வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து நடத்தும் 6-வது "ரன் ஃபோர் நேசன்" மாரத்தான் போட்டி, இந்தாண்டு "போதையில்லா கோவை" என்ற மையக் கருத்துடன் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி கோவை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்த மாரத்தான் போட்டியில், இந்த ஆண்டு 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு, இன்று (13.06.2026) வி.ஜி.எம் மருத்துவமனை வளாகத்தில் போட்டிக்கான சீருடை வெளியீட்டு விழா நடைபெற்றது. மேலும், அரசு மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டதுடன், அரசு பள்ளிகளுக்கான கணினிகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.எம். சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும், பல்வேறு ரன்னர்ஸ் கிளப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. பதக்கங்கள், சீருடைகள், உணவு மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடும்பம் முழுவதும் பங்கேற்கும் வகையிலான சிறப்பு விழாவாக இந்த மாரத்தான் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை வி.ஜி.எம் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன்பிரசாத், வி.ஜி.எம் மருத்துவமனை ஆர்த்தோ மற்றும் கோவை அத்லெடிக் கிளப்பின் தலைவர் டாக்டர் சுமன், சேர்மேன் விஜயகுமார், செயலாளர் ஸ்ரீனிவாசன், துணை செயலாளர் சிவகுமார் மற்றும் மேலாளர் தர்மராஜ் உள்ளிட்டோர் முன்னின்று செய்து வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.