கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், வேகத்துக்கும் திறமைக்கும் இடையிலான கடும் போட்டி காணப்பட்டது. ரேஸ் கார்கள் சீறிப்பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்தப் போட்டியில் நடைபெற்ற மூன்று பந்தயங்களிலும் ஏழு வெவ்வேறு வீரர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
முதல் பந்தயத்தில் தென்னாப்பிரிக்க வீரர் லுவிவே சம்புட்லா வெற்றி பெற்றார். 8-வது இடத்தில் இருந்து பந்தயத்தைத் தொடங்கிய அவர், தொடக்க சுற்றுகளிலேயே முன்னேறி முதலிடத்தைப் பிடித்தார். இரண்டாவது பந்தயத்தில் 15 வயதான ஆர்யன் நரோலா, கடும் போட்டிக்கு இடையே 0.624 வினாடிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இளம் வயது வெற்றியாளர்களில் ஒருவராக அவர் இடம்பிடித்தார். மூன்றாவது பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆரிஸ் கிரியாகோவ் வெற்றி பெற்றார்.

முதல் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அவர், இரண்டு பந்தயங்களில் இரண்டாம் இடமும், ஒரு பந்தயத்தில் முதலிடமும் பிடித்து கவனம் ஈர்த்தார். மேலும், 15 வயதான சிங்கப்பூர் வீரர் ஆரோன் மேத்தா, அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதையடுத்து, பார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுற்றும் கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.