தேனி: கடமலைக்குண்டு கிராமத்தில் சாதி மத பேதமின்றி 24 சமுதாய மக்கள் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையுடன் கோவில் திருவிழாநடத்தினர். முளைப்பாரி, தீச்சட்டி, தேவராட்டத்துடன் பொங்கல் திருவிழா கோலாகல நடைபெற்றது. 

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன், முத்தாலம்மன், முருகன் மற்றும் பட்டாளம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கிராமத்தில் வசிக்கும் 24 சமுதாயங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து, முழு ஒற்றுமையுடன் இணைந்து நடத்திய இந்த கிராம பொங்கல் திருவிழா மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 

அலகு குத்தி அக்னி சட்டி ஏந்தி ஊர்வலம் வந்த பெண் பக்தர்

3 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேள தாளங்கள் முழங்க வைகை ஆற்றிற்குச் சென்று அம்மனுக்குக் கரகம் எடுத்து வந்து பக்திப் பெருக்குடன் வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 48 நாட்களாகக் கடுமையான விரதம் இருந்த பொதுமக்கள் அலகு குத்தியும், தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். 

கும்மியடித்த வழிபட்ட பக்தர்கள்.

ஆயிரக்கணக்கான பெண்கள் பக்திப் பாடல்களுக்கு ஏற்ப முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அப்போது முளைப்பாரி சுமந்து வந்த பெண்களின் முன்னே ஆண்கள் பாரம்பரிய தேவராட்டம் ஆடியது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதேபோல் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்து வீதி உலா வந்து வழிபாடு செய்தனர். பொதுவாகவே கோவில் திருவிழாக்களில் சிறு சிறு சண்டைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ள நிலையில், 24 சமுதாய மக்கள் அனைவரும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து, 3 நாட்களும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் அமைதியான முறையில் இத்திருவிழாவைக் கொண்டாடி முடித்ததைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் பெரும் வியப்புடனும் பாராட்டுடனும் பார்த்தனர்.

Related

“சீப்பாலக்கோட்டை சுடலை மாடசாமி கோயில் குடமுழுக்கு விழா!”