இந்து மக்களின் மயான பூமியைப் புனரமைத்துத் தூய்மையாக மாற்றி அமைத்திட வேண்டும் என சிவபக்த சேனா ஆன்மீகப் பகுத்தறிவு அறக்கட்டளை சார்பில் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில், 'இறைவி நுண்கலை பயிற்சிப் பள்ளி' சார்பில் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் 27-ஆவது குரு மகாசந்நிதானம் ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் ஆன்மீகச் சிறப்புரைகளும் நடைபெற்றன.மேலும் இந்நிகழ்வில், சிவபக்த சேனா ஆன்மீகப் பகுத்தறிவு அறக்கட்டளை சார்பில் 'ருத்ர பூமி' என்ற ஆன்மீக நூல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிஜிக்கு 'ருத்ரபூஷண்' விருதும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.
பின்னர்ச் செய்தியாளர்களைச் சந்தித்த சிவபக்த சேனா ஆன்மீக அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சிவக்குமார் கூறியதாவது: "சிவபக்த சேனா ஆன்மீகப் பகுத்தறிவு அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், இந்தியா முழுவதும் உள்ள இந்து மயானங்களைப் புனரமைத்துத் தூய்மையான இடமாக மாற்றுவதாகும்.

பிற மதத்தினர் தங்களது மயானங்களைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பராமரித்து வருகின்றனர். ஆனால், இந்து மக்களின் மயான பூமிகள் மிகவும் பாழடைந்தும் தூய்மையின்றியும் காணப்படுகின்றன. எனவே, இதுபோன்ற மயானங்களைப் புனரமைத்துத் தூய்மையாக மாற்ற வேண்டும். இதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் அறக்கட்டளை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன; அரசிடமும் இதனை வலியுறுத்தி வருகிறோம்.
மேலும், இந்திய அரசால் 'பத்மபூஷண்' விருது வழங்கப்பட்டு வருகிறது. அது வைணவத்தைச் சுமந்து செல்வது போல, 'ருத்ரம்' என்பது சைவத்தைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதற்காக 'ருத்ரபூஷண்' என்ற விருதை அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறோம். இன்று அவ்விருதை அறிமுகம் செய்து, சிவத்தொண்டு புரிபவர்களுக்கு வழங்க உள்ளோம். அதன்படி இன்று தருமபுர ஆதீனம் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். முன்னதாக இவ்விருது வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருது சிவத்தொண்டு செய்பவர்களுக்காகப் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்து மயானங்களின் நிலையைக்கண்டறிந்து, அவற்றின் தரத்தை உயர்த்துவதில் எங்கள் தொண்டு என்றென்றும் தொடரும். அதேபோன்று மயானங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தவும் சிவபக்த சேனா ஆன்மீகப் பகுத்தறிவு அறக்கட்டளை பாடுபடும்."
இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக அன்பர்களும் பெரியோர்களும் கலந்துகொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.