தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா நடைபெற்றது. திருத்தேர் பவனியில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.தேம்பாவனி எழுதிய வீரமாமுனிவர் இந்த பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. புனித பரலோக மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விண்ணேற்பு பெருவிழா மிகவும் புகழ்பெற்றது.
இந்தாண்டுக்கான விண்ணேற்பு பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் மறையுரை, திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு மறையுரை வழங்கி திருப்பலி நிறைவேற்றினர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று (15.08.2026) அதிகாலை நடைபெற்றது. மதுரை உயர் மறைமாவட்ட மேனாள்,பேராயர் அந்தோணிபாப்புசாமி மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்ட நிர்வாகி பேரருட் தந்தை மோட்சராஜன் ஆகியோர் தலைமையில் தேரடி ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாண வேடிக்கை முழங்க மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டப்
ஆரோக்கிய மாதா மற்றும் பரலோக மாதா சொரூபங்கள் தாங்கிய தேர் பவனி தொடங்கியது. தேருக்கு பின் ஏராளமான மக்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.மேலும் திருத்தேர் பவானியின் போது திருத்தேர்கள் மீது மக்கள் பூக்களை எறிந்தனர். அதுமட்டுமின்றி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனை செய்தனர். இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் பலத்த
போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காமநாயக்கன்பட்டி வட்டார இறைமக்கள், பேராலயப் பங்குத்தந்தை மோயீசன் மற்றும் உதவிப் பங்குத்தந்தை மரியஜோமிக்ஸ் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.