தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவை அமராவதியில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக விஜய், ஆந்திர மாநிலத்துக்கு சென்றுள்ளார். இதற்காக அவர் இன்று பிற்பகல் சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடாவுக்கு சென்றார். 3.45 மணியளவில் விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், அங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு சென்றார்.
கனக துர்கா கோயிலில் மேளதாளங்கள் முழங்க முதல்வர் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அந்தக் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டார். கோயிலுக்குச் செல்லும் வழியிலும், கோயிலிலும் ஏராளமானோர் முதல்வர் விஜய்யை உற்சாகமாக வரவேற்றனர்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின் போது, சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசித்ததாக தெரிகிறது.
இதேபோல், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டுவது தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதித்ததாக தெரிகிறது.
இந்தச் சந்திப்பின்போது கோதாவரி - கிருஷ்ணா - காவிரி ஆகிய ந​திகள் இணைப்​புத் திட்டம், நெல்லூரில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடுவது ஆகியன குறித்து ஆந்திர முதல்வரிடம் தமிழக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, ஆந்திர அமைச்சர்கள் நாராயணா, நிம்மலா ராமாநாயுடு, எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டி ஆகியோரும், தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
முன்னதாக, சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று பிற்பகல் 3:45 மணிக்கு, விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்யை, ஆந்திர நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் பி. நாராயணா, நாடாளுமன்ற உறுப்பினர் வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

Related

“கட்சிகளை பிளவு படுத்துவதில் பாஜகவும், தேர்தல் ஆணையமும் கூட்டுச்சதி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!”