சென்னை: ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் தினசரி பயணம் மற்றும் தூரப் பயணங்களுக்குச் சென்னை கோட்டத்தின் புறநகர் மற்றும் முதன்மை ரயில்வே கட்டமைப்பையே சார்ந்துள்ளனர். ரயில்கள் பாதுகாப்பாகவும், சரியான நேரத்திலும் இயக்கப்படுவதற்குப் பின்னால், இந்த கோட்டம் முழுவதும் இரவு பகலாக உழைக்கும் ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்களின் முறையான மற்றும் அர்ப்பணிப்புமிக்க பராமரிப்புப் பணிகளில் அடங்கியுள்ளது.
ரயில் இயக்கத்தின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் திறனை உறுதி செய்வதற்காக, சென்னை கோட்டம் தனது நெட்வொர்க் முழுவதும் நாள்தோறும் 100 பராமரிப்புப் பணிகள் (Maintenance Blocks) வரை மேற்கொள்கிறது . இதில் போக்குவரத்துப் பணிகள் (Traffic Blocks), மின்சாரப் பணிகள் (Power Blocks), பொறியியல் பணிகள் (Engineering Blocks) மற்றும் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்புப் பணிகள் (S&T Blocks) ஆகியவை அடங்கும். இவை, ரயில்வே குழுக்கள் முக்கியமான ஆய்வு, பராமரிப்பு, புதுப்பித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வழிவகுக்கின்றன.
இப்பணிகளின் கால அளவு, வேலைகளின் தன்மையைப் பொறுத்து 30 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரை மாறுபடும் . வழக்கமான ஆய்வுகள் மற்றும் தடுப்பு பராமரிப்புப் பணிகள் பொதுவாக 30 முதல் 90 நிமிடங்களுக்குள் முடிக்கப்படுகின்றன . அதே வேளையில், தண்டவாளங்களை புதுப்பித்தல், சமிக்ஞை அமைப்புகளை மேம்படுத்துதல், மேல்நிலை மின் கம்பிகள் பராமரிப்பு, ரயில் நிலைய மறுவடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முக்கியப் பணிகளுக்கு 2 முதல் 4 மணி நேரம் வரை தேவைப்படுகிறது.
மிக பரபரப்பான ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றான சென்னை கோட்டம், விரிவான ரயில் தண்டவாளங்கள், சமிக்ஞை அமைப்புகள், மேல்நிலை மின் சாதனங்கள், ரயில் நிலையங்கள், மேம்பாலங்கள் மற்றும் பயணியர் வசதிகளை நிர்வகித்து வருகிறது. இப்பராமரிப்புப் பணிகளைச் சீராக மேற்கொள்ள, போக்குவரத்து (Operating), பொறியியல் (Engineering), சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு (S&T), மின்சாரம் (Electrical) மற்றும் மின் இழுவை விநியோகம் (TRD) ஆகிய துறைகளுக்கிடையே தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.

இப்பணிகளின் முன்னணியில் தண்டவாளப் பராமரிப்பாளர்கள் (Track Maintainers), கீமேன்கள் (Keymen), பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், சமிக்ஞை பராமரிப்பாளர்கள், மின் விநியோகப் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வெல்டர்கள், இயந்திர இயக்குநர்கள் மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள் எனப் பலரும் பகல் மற்றும் இரவு நேரங்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.
தண்டவாள ஆய்வுகள், தண்டவாளம் மற்றும் ஸ்லீப்பர்களைப் புதுப்பித்தல், டர்ன்அவுட் பராமரிப்பு, சமிக்ஞை அமைப்பு சோதனைகள், மேல்நிலை மின் சாதனப் பராமரிப்பு, பாலங்கள் ஆய்வு மற்றும் ரயில் நிலைய உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவை இவர்களின் முக்கியப் பொறுப்புகளாகும்.
பராமரிப்புப் பணிகளின் திறன் மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவதற்காக, சென்னை கோட்டம் 'பல்லாஸ்ட் க்ளீனிங் மெஷின்' (BCM), 'யூனிமாட் டேம்பிங் மெஷின்' (UNIMAT), 'டைனமிக் ட்ராக் ஸ்டெபிலைசர் (DTS)' மற்றும் 'ட்ராக் ரிலேயிங் ட்ரெயின்' (TRT) போன்ற மேம்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட பராமரிப்பு அமைப்புகளைப் பரவலாகப் பயன்படுத்தி வருகிறது . இந்த நவீன இயந்திரங்கள் தண்டவாளத்தின் வடிவவியலைப் பராமரிக்கவும், பயணத் தரத்தை உயர்த்தவும், நெட்வொர்க் முழுவதும் உள்கட்டமைப்பின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகின்றன.
பகல் நேரப் பராமரிப்புப் பணிகள் பெரும்பாலும் ரயில் நிலைய மறுவடிவமைப்பு, பயணியர் வசதி மேம்பாடுகள் மற்றும் 'அமிர்த ரயில் நிலையத் திட்டத்தின்' கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ரயில்களின் இயக்கம் குறைவாக உள்ள இரவு நேரங்கள், முக்கியமாகத் தீவிர தண்டவாளப் பராமரிப்பு, இயந்திரமயமாக்கப்பட்ட பணிகள் மற்றும் கணினிவழி ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், சென்னை கோட்டம் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகள், மேம்பட்ட ஆய்வு கருவிகள் மற்றும் முன்கணிப்பு பராமரிப்பு முறைகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை படிப்படியாகத் தழுவி வருகிறது. இது குறைபாடுகளைச் சரியான நேரத்தில் கண்டறியவும், ரயில்வே சொத்துக்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்தத் தீவிரப் பணிகள் பெரும்பாலும் திரைமறைவிலேயே நடந்தாலும், இவைதான் பாதுகாப்பான மற்றும் திறமையான ரயில் இயக்கத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன . சென்னை கோட்டம் முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் தொடர்ந்து பாதுகாப்பான, நம்பகமான மற்றும் சரியான நேரத்திலான ரயில் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதில் ஒவ்வொரு பராமரிப்புப் பணியும், ஆய்வும் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடும் முக்கியப் பங்காற்றுகின்றன.
- வெளியீடு: தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.