பொள்ளாச்சி:
“2031ல் தமிழக மக்கள் முன்பு நம்முடைய அரசியல் கட்சி நிற்கும். 39 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 2026ல் தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்கள். அவர்கள் 2031ல் மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவார்கள்” என ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை, புதிதாக வீ தி லீடர்ஸ் இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த இயக்கத்தின் மாநாடு இன்று கோவை பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசிய அண்ணாமலை, பாஜக குறித்தும் மதம் தொடர்பாகவும் சில கருத்துகளை குறிப்பிட்டார்.
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, “இது என்னுடைய குடும்ப அமைப்பு கிடையாது. எந்த அழைப்பும் இல்லாமல் இத்தனை பேர் வந்துள்ளீர்கள் என்றால், தமிழகத்தில் நல்லது நடக்கும் என இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. நாம் யாரையும் நம் இயக்கத்துக்கு வரும்படி அழைக்கவில்லை. நம் செயல்பாடுகளை பார்த்து மக்கள் நம்மிடம் இணைய வேண்டும்.
இப்போது வீ தி லீடர்ஸ் இயக்கத்தில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 50 லட்சமாக உயரும் போது தமிழக மக்கள் நம்மை அழைக்கின்றார்கள் என்று பொருள். இந்த 50 லட்சம் பேரும் தன்னார்வமாக நம்மோடு வர வேண்டும். இனி அடுத்த 6 மாதங்களில், ஒவ்வொரு மாதமும் ஒரு முக்கிய பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வோம். இதுகுறித்து நாம் மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
19 லட்சத்தில் 83 சதவீதம் பேர் ஆண்கள், 17 சதவீதம் பேர் பெண்கள் இருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என இத்தனை சதவீதம் மகளிர் நம்மோடு இணைந்துள்ளனர். இதனை 50 சதவீதமாக மாற்ற வேண்டும். நம் அமைப்பில் 54 சதவீதம் பேர் 39 வயதுக்கு கீழே உள்ளனர். அவர்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். 39 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 2026ல் தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்கள். அவர்கள் 2031ல் ஒரு மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவார்கள்.
இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் போதைக்கு எதிரான மாதமாக இருக்கும். போதை இல்லாத தமிழகத்தை நம் காலத்தில் உருவாக்க வேண்டும். தவெக ஆட்சியை விமர்சிக்க வேண்டும் என என்னிடம் சொல்கிறார்கள். ஒரு கோடியே 68 லட்சம் பேர் ஓட்டு போட்டு இந்த ஆட்சியை கொண்டு வந்துள்ளனர். அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். இவர்கள் 10 ஆண்டுகள் எம்எல்ஏக்களாக இருக்கவில்லை. அனைவரும் புதியவர்கள். செங்கோட்டையனை தவிர அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள். அவர்கள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள். அவர்களை தூக்கி பிடிக்க வேண்டும். அழுத்தக் கூடாது.
நாம் மூர்க்கத்தனமாக அதிகாரத்தை பிடிக்க வரவில்லை. நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த அமைப்பு இருக்கும்.
எனவே இந்த ஆட்சியை ஒரு ஆண்டுக்கு விமர்சிக்க போவதில்லை. 2031ல் தமிழக மக்கள் முன்பு நம்முடைய அரசியல் கட்சி நிற்கும். நாம் ஆரோக்கிய அரசியலுக்காக நிற்போம், அற்ப அரசியலுக்காக நிற்க மாட்டோம். மக்கள் நமக்கு வாய்ப்பு தருவார்கள்” எனப் பேசினார். நான் பாஜகவில் இருந்தேன். இந்த இயக்கத்திற்கு பாஜகவில் இருந்து பலரும் வந்துள்ளனர். பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுகவில் இருந்தும் வந்துள்ளனர். பாஜகவில் இருந்து விலகியது குறித்து நான் இங்கு பேச விரும்புகிறேன். இதுவரை அது பற்றி நான் எங்கும் பேசியதில்லை. பாஜக மீது எனக்கு கோபம் இருந்ததா? ஆம் இருந்தது. ஆனால், அதை பொறுப்புணர்ச்சி உடன் காட்ட வேண்டி இருந்தது. பாஜகவில் இருந்து விலகிய பிறகும் யாரை பற்றியும் 38 நாட்கள் தவறாக பேசவில்லை. அப்போது திமுகவை சேர்ந்தவர்கள் நான் பாஜகவின் பீ டீம் என்றனர். வெளியே வந்து பாஜக பற்றி திட்டினால் தானே வருவார்கள் என்று சிலர் சொன்னார்கள். ஆனால், நான் பழிச்சொல் சொல்லிவிட்டு வெளியே வர மாட்டேன். எங்களுக்கு இன்னொரு பாதை இருக்கிறது. அதில் சென்று மக்களுக்கு நல்லது செய்வோம். அவ்வளவு தான்!
இப்போது அடுத்த கேள்வி. அண்ணாமலை ஒரு தேசியவாதியா? இறுமாப்புடன் சொல்வேன் ஆம் தேசியவாதி தான். இந்தியானா? தமிழனா? எதற்கு இதில் சிக்கல். எப்போதும் இந்தியன் என்பதில் கர்வம். அந்த இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம்! இன்றும் நான் சொல்கிறேன். எனது மதம் இந்து மதம். திருநீறு வைக்கிறேன். குங்குமம் வைக்கிறேன். ஆனால், வீட்டில் இருந்து வெளியே வரும்போதே எனது மதத்தையும் சாதியையும் வீட்டிலேயே பூட்டி வைத்துவிடுவேன். அனைவருக்கும் பொதுவான நபராகவே நான் உங்கள் முன்பு நிற்கிறேன். மதத்தை ஒவ்வொரு முறையும் தூக்கி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான இந்து அனைவரையும் சமமாக பார்ப்பான். அனைவரையும் சமமாகவே நடத்துவான்" என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.