​இடுக்கி,கேரளா, ஆக.2- 

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

​தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

​மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

​மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

Related

“தேயிலை தோட்டங்களில் ட்ரோன்கள் மூலம் மூட்டைகளை கையாள புதிய முயற்சி!”