சென்னை: வானியல் அதிசயங்களில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிகழவிருக்கிறது.
வானியல் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வுக்காக காத்திருக்கிறார்கள். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வந்து, சூரியனின் ஒளி பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீது விழாமல் தடுக்கும் நிகழ்வாகும்.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின் வடகிழக்கு போர்த்துக்கல் நாடுகள் இந்த முழு சூரிய கிரகணத்தின்போது இருண்டு விடும் என்று கூறப்படுகிறது. இங்கெல்லாம் பகல் நேரத்தில் சூரியன் முற்றிலும் மறைந்து விடுமாம்.
அதேவேளையில், ஐரோப்பா, ஆப்ரிக்கா, வடக்கு அமெரிக்க நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் பகுதிநேர சூரிய கிரகணம் ஏற்படும்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதுபோல ஸ்பெயினில் முழு சூரிய கிரகணமானது 1905ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
இந்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. எனினும் நாசா போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக மக்கள் நேரலையில் முழு சூரிய கிரகணத்தைக் காணலாம்.
அடுத்த முழு சூரிய கிரகணம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழவிருக்கிறது. அதுவும் ஸ்பெயின் வடக்கு ஆப்ரிக்கா சௌதி அரேபியா, ஏமன் போன்ற நாடுகளில் மட்டுமே தென்படும் என நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் 2033ஆம் ஆண்டு மார்ச் 30 வரை முழு சூரிய கிரகணத்தைக் காண வழியேயில்லை என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அன்றைய நாளிலும் சில பகுதிகளில்தான் பார்க்க முடியும் என்றும், ஒட்டுமத்த அமெரிக்காவிலும் 2044ஆம் ஆண்டுதான் முழு சூரிய கிரகணம் காண முடியும் என்றும் கூறப்படுகிறது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.