சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தாக்கல் செய்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.அப்போது பேசிய முதல்வர், காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தபோது முதலமைச்சர் விஜய் பேசியபோது...

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றம், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும்.

ஆதலால், கர்நாடக அரசு மேகேதாட்டுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தையோ, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது என்கிற தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். 

தமிழக அரசு கொண்டுவந்த இந்த தனித் தீர்மானத்தில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, மதிமுக, தேமுதிக, பாமக, அதிமுக, திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன.

இதனையடுத்து, மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌, சட்டமன்றப்‌ பேரவை முன்னாள்‌ உறுப்பினர்கள்‌ மறைவிற்கு இரங்கற்‌ குறிப்புகளும்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ முதுபெரும்‌ தலைவர்‌ தோழர்‌ நல்லகண்ணு, சட்டமன்றப்‌ பேரவை முன்னாள்‌ செயலாளர்‌ சி.கு. இராமசாமி, பிரபல திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ ஆர்‌.பி. செளத்ரி மற்றும்‌ கே. ராஜன்‌, பிரபல திரைப்பட இயக்குநர்‌ பாரதிராஜா ஆகியோரது மறைவிற்கு இரங்கல்‌ தீர்மானங்களும்‌ நிறைவேற்றப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், “தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஆதரித்த பேரவை உறுப்பினர்களுக்கு நன்றி.

மேகதாது பிரச்சினைக்காக எனது தலைமையில் 26.05.2026 அன்று பிரத்யேகமாக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தனி நடுவர் மன்றம் அமைக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கருத்தை தீர்மானத்தின் 4-வது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம்,” என்று கேட்டுக் கொண்டார். இதன்பின் திருத்தப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌, சட்டமன்றப்‌ பேரவை முன்னாள்‌ உறுப்பினர்கள்‌ மறைவிற்கு இரங்கற்‌ குறிப்புகளும்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ முதுபெரும்‌ தலைவர்‌ தோழர்‌ நல்லகண்ணு, சட்டமன்றப்‌ பேரவை முன்னாள்‌ செயலாளர்‌ சி.கு. இராமசாமி, பிரபல திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ ஆர்‌.பி. செளத்ரி மற்றும்‌ கே. ராஜன்‌, பிரபல திரைப்பட இயக்குநர்‌ பாரதிராஜா ஆகியோரது மறைவிற்கு இரங்கல்‌ தீர்மானங்களும்‌ நிறைவேற்றப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related

“மேகதாது அணை விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் கடுமையான சட்டப்போராட்டம் நடத்தினோம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!”