கோவை, ஆக.02-

கோவை  டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா, என்.ஜி.பி. கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது. ​விழாவிற்கு, கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமையேற்றார்.

​முன்னதாக, டாக்டர் என்.ஜி.பி. கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ஓ. டி. புவனேஸ்வரன் வரவேற்புரையாற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். யு. பிரபா, கல்லூரியின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புச் சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார். ​​இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சங்கர் வேணுகோபால் பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

​அப்போது பேசிய அவர்: ​"இன்றைய வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற தொடர்ச்சியான கற்றல், மாற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மிக அவசியம். எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும்." என மாணவர்களை ஊக்கப்படுத்தினார். ​தொடர்ந்து தலைமையுரையாற்றிய டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, பட்டம் பெறும் மாணவர்கள் தொழில்முறை நெறிமுறைகளைப் பின்பற்றி, வாழ்நாள் முழுவதும் கற்றலைத் தொடர வேண்டும் என்று வாழ்த்தினார்.

​இவ்விழாவில் 576 இளநிலை மாணவர்கள் மற்றும் 254 முதுநிலை மாணவர்கள் என மொத்தம் 830 மாணவர்களுக்கு பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ​இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் டாக்டர் அருண் என். பழனிசாமி, அறங்காவலர் திருமதி மதுரா வி. பழனிசாமி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related

“கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் விமர்சையாக நடைபெற்ற ஆண்டு விழா !”