விருதுநகர்: நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், மற்றும் தன்னார்வ இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் "நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா குழந்தைகளுக்கு ஊக்க உரையுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர்நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, இன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் இல்லங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் 8 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இக்குழந்தைகள் இல்லங்களில் தற்போது 171 (ஆண் - 79, பெண்- 92) குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளில் ஆதார், பிறப்புச்சான்று, சாதிச்சான்று மற்றும் வங்கிக்கணக்குகள் இல்லாத குழந்தைகளுக்கு அதற்கான சான்றுகளை பெற்றுத்தருவது தொடர்பாக சிறப்பு முகாம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட இல்லங்களிலுள்ள குழந்தைகள் மற்றும் இல்ல நிர்வாகிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளை தனது அலுவலக அறையில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, "நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்று ஊக்கமூட்டும் வகையில் அறிவுரை வழங்கி, உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைய விடாமுயற்சியுடன் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் குழந்தைகளிடையே தன்னம்பிக்கையையும்உயர்ந்த இலட்சியங்களை நோக்கி பயணிக்கும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இல.மீனாட்சி, அரசு அலுவலர்கள், குழந்தைகள், பாதுகாவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related

“சுரண்டை அருகே விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி!”