விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா
ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சூலக்கரை அன்னை சத்யபாமா நினைவு காப்பகம், புளியங்குளம் – புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம், மருளுத்து நடுநிலைப்பள்ளி - காலை உணவுத் திட்டம், இராமக்குடும்பன்பட்டி – சமுதாயக்கூடம் மற்றும் அங்கன்வாடி புதுப்பித்தல், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, சூலக்கரை அன்னை சத்யபாமா நினைவு காப்பகத்தில் தங்கிப் பயிலும் மாணவர்களின் தங்குமிடம் மற்றும் குடிநீர், கழிப்பறை வசதி, மின் வசதி, படிப்பறை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பார்வையிட்டார். மேலும், மாணவர்களின் கல்வி நிலை குறித்து கேட்டறிந்து மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
புளியங்குளத்தில் கனிமவள நிதி-2020-2021 திட்டத்தின் கீழ், ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடப் பணிகளையும்
தொடர்ந்து, மருளுத்து நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை பார்வையிட்டு, மாணவர்களுடன் உணவு அருந்தினார். பின், தேசிய யோகா ஒலிம்பியாட் 2026 னை முன்னிட்டு, இணைய வழி வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ்கள் பெற்ற 4 மாணவ, மாணவியர்கள் மற்றும் சிலம்பம் போட்டியில் வென்று சான்றிதழ் பெற்ற மாணவரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தார்.
பின்னர், இராமக்குடும்பன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினையும், RBM 2025-2026 திட்டத்தின் கீழ், ரூ.2 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்டு வரும், அங்கன்வாடி மையத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தும், SCPAR 2025-2026 திட்டத்தின் கீழ், ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சமுதாயக் கூடத்தில் தடையற்ற குடிநீர், மின்சாரம் மற்றும் முறையான வடிகால் வசதிகள் அமைப்பதை உள்கட்டமைப்புப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராமச்சந்திரன் மற்றும் லியாகத் அலி, செயற்பொறியாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.