விருதுநகரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி 2 புதிய வழித்தடங்களுக்கான பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் கொருக்காம்பட்டி – இராஜபாளையம் வழிதடத்திற்கும் மற்றும் அருப்புக்கோட்டை – திருச்சுழி வழித்தடத்திற்கும் புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்கு. ஜெகதீஸ்வரி தெரிவித்ததாவது: கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம், கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையம் வழிதடத்திற்கும், அருப்புக்கோட்டை – திருச்சுழி வழிதடத்திற்கும் புதிய பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து சேவை மூலம் அப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த பேருந்து சேவை பெரிதும் பயனளிக்கும். மாணவர்கள் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், பணியாளர்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும் இந்த பேருந்து சேவை உதவிகரமாக அமையும்.

மேலும், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு பயண நேரத்தையும் சிரமத்தையும் குறைத்து, எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும். புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்டநாள் போக்குவரத்துத் தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இச்சேவை உறுதுணையாக அமையும்.
மேலும், இப்புதிய பேருந்து சேவை மூலம் இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் எளிதில் சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்படுவதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கும் வழிவகை செய்யும். எனவே, இப்புதிய பேருந்து சேவையினை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், இப்பகுதி மக்களின் நீண்டநாள் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து சேவை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.