திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரம் கிராமத்தில், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஏபிடி சொசைட்டி மற்றும் ஏபிடி சேவை மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

சக்தி குழுமங்களின் நிறுவனர் பத்மபூஷண் அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம்  சிந்தனைகளின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை, சக்தி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ம. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், ஒருங்கிணைந்த பண்ணைய முறை, நவீன விவசாய தொழில்நுட்பங்கள், காய்கறி, கால்நடை, கோழி, ஆடு, மீன், காளான், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் குறித்த பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், தரமான கால்நடை தீவனங்கள் மற்றும் உபகரணங்களும் சேவை மையம் மூலம் வழங்கப்பட்டது.

கிராமப்புற குழந்தைகளுக்கான கல்வி, பெண்களை தொழில்முனைவோராக உருவாக்குதல் உள்ளிட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களும் இம்மையத்தின் மூலம் செயல்படுத்தினர். நிகழ்ச்சியில் வினோதினி பாலசுப்பிரமணியம், சம்யுக்தா சங்கர் வாணவராயர், சுருதி, அம்ரித் விஷ்ணு, நிறுவன அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், சந்திராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500 விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இத்திட்டம் தங்களது கிராம விவசாய வளர்ச்சிக்கு பயனளிக்கும் என்றும், முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related

“சுரண்டை அருகே விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி!”