தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஹெல்மெட், மரக்கன்றுகள் வழங்கி காவல்துறை-ரோட்டரி சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழ்நாடு காவல்துறையின் தாராபுரம் போக்குவரத்து காவல் பிரிவும், தாராபுரம் ரோட்டரி சங்கமும் இணைந்து, சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தின.
தாராபுரம்–உடுமலை சாலை சிக்னல் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார். அப்போது, சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனங்களில் முன்பக்க இருக்கைகளில் அமருபவர்கள் சீட்பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், போதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் இயக்குதல், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல் போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயகரமான செயல்கள் என்பதால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார்.
அத்துடன், போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சாலை விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு உடனடியாக வழிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை பகுதிகளில் தேவையற்ற ஒலி எழுப்பாமல் செல்ல வேண்டும் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஊர் காவல் படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 100 பேருக்கு இலவச தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. மேலும், உடுமலை சிக்னல் பகுதியில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த ஓட்டுநர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
அதேபோல், நான்கு சக்கர வாகனங்களில் இருபுறமும் சீட்பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள், துணிப்பைகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், தாங்கள் மட்டுமின்றி தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். தாராபுரம் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஊர் காவல் படை வீரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், "தலைக்கவசம் நம் தலையை காப்பதற்கு மட்டுமல்ல; நம் தலைமுறையையும் காப்பதற்காகும்", "சாலையில் விதிப்படி நடப்போம்; விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்" என்ற விழிப்புணர்வு வாசகங்களை வலியுறுத்தி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.