தலைக்கவசம் அணிந்தால் மரக்கன்று… அணியாவிட்டால் கொரில்லா அடி! – தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறையின் வித்தியாசமான விழிப்புணர்வு.
தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததால் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இன்று போக்குவரத்து காவல்துறை சார்பில் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரில் குரூஸ் பர்னாந்து சிலை அருகே, தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தலைமையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை காவல்துறையினர் பாராட்டி, அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
அதேநேரத்தில், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு கொரில்லா வேடம் அணிந்த நபர் மூலம் லேசாக ஒரு அடி கொடுத்து, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தலைக்கவசம் என்பது அபராதத்தை தவிர்ப்பதற்காக அல்ல உயிரைக் காப்பாற்றுவதற்காக என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாகன ஓட்டிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.