தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான 17 பவுன் தங்க நகைகள் துணிகர கொள்ளை, கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை.

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே கோல்டன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக் தனசிங் (26) மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீ மேரி (எ) தீபிகா கர்ப்பிணியாக இருப்பதால் கடந்த 12ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வரும்பொழுது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான மொத்தம் 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் துணிகரமாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர் ஆஷிக் தனசிங் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடைபெற்ற வீட்டைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

“சுரண்டை அருகே விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி!”