தேனி: ஜேசிபி வாகனம் பறிமுதல் விவகாரம் தொடர்பாக காவல் நிலையம் முன்பு தம்பதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த பீர் முகமது - ஜெனிதா பேகம் தம்பதியினர். சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று ஜேசிபி (JCB) வாகனம் வாங்கியுள்ளனர். கடந்த 15 மாதங்கள் முறையாகத் தவணை செலுத்திய நிலையில், கடந்த ஜூன் மாதம் தவணை செலுத்தத் தாமதமானதால் நிதி நிறுவன ஊழியர்கள் வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தவணைத் தொகையைக் கட்டத் தயாராக இருந்தும் கூடுதல் பணம் கேட்டதால், பீர் முகமது காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, தேவதானப்பட்டி சோதனைச் சாவடி அருகே தங்களது ஜேசிபி வாகனத்தைக் கண்ட பீர் முகமது, அதை மீட்டு தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆனால், அங்குள்ள காவல்துறையினர் பீர் முகமதுவுக்குத் தெரியாமல், வாகனத்தை ரகசியமாக நிதி நிறுவன ஊழியர்களிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான செயலால் ஆத்திரமடைந்த தம்பதியினர் மற்றும் அவர்களது உறவினர்கள் காவல் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலை கலைக்க முயன்ற தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ், பெண் என்றும் பாராமல் ஜெனிதா பேகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெனிதாவும் அவரது சகோதரரும் காவல் ஆய்வாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. "முறையாக விசாரணை நடத்தாமல், பணம் பெற்றுக் கொண்டு தனியார் நிதி நிறுவனத்திற்கு ஆதரவாகவே தேவதானப்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் வாகனத்தை மீட்டுத் தர வேண்டும்." எனகோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.