தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி இன்று கம்பம் நகரில் உள்ள தெருக்கள், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். தெருக்களில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொதுமக்களுக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். சாலைகளில் குப்பைகளைக் கொட்டாமல், தரம் பிரித்துத் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்; அதன் மூலம் கம்பம் நகரம் தூய்மையான நகரமாக மாறும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
"கம்பம் சட்டமன்றத் தொகுதியைக் 'கிளீன் சிட்டி - க்ரீன் சிட்டி' (Clean City - Green City) என்னும் முன்னெடுப்பின் கீழ், தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்குப் பொதுமக்களும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினரின் சொந்த ஜேசிபி (JCB) இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியைக் கம்பம் புறவழிச்சாலையில் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கம்பம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெறும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில், "பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து, குப்பைகளைப் பொதுவெளியில் கொட்டாமல் தரம் பிரித்து வழங்க வேண்டும். அதேபோன்று, கருவேல மரங்களை அகற்றி மக்களுக்குப் பயன் தரக்கூடிய வகையில் உள்ள மரக்கன்றுகளை ஒவ்வொருவரும் நடுவது நமது கடமையாகும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "கம்பம் சட்டமன்றத் தொகுதியைத் தொடர்ந்து பசுமையாகவும், தூய்மையாகவும் விளங்கக்கூடிய தொகுதியாக மாற்றும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். மேலும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவிற்குத் தலைமையகத்திலிருந்து தேனி தென்மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பொறுப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், பொறுப்பு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு ஒரே தலைவர் முதல்வர் ஜோசப் விஜய், மற்ற அனைவரும் தொண்டர்களே. எங்களது பணியினைச் சீரும் சிறப்புமாகச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செல்வோம்" எனத் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.