சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஐயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், ஏஜென்ட் மூலம் அல்பேனியா நாட்டிற்கு கட்டட வேலைக்காகச் சென்ற நிலையில், சொந்த ஊர் திரும்புவதாகத் தகவல் தெரிவித்துவிட்டு திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பெரியசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்வதற்காக ஏஜென்ட் மூலம் அல்பேனியா நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அவர், கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி சொந்த ஊருக்குத் திரும்புவதற்காகப் புறப்படுவதாகத் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அன்று இரவு சுமார் 10 மணியளவில் துபாய் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிவிட்டதாகவும், அங்கிருந்து கொல்கத்தாவிற்குச் செல்வதற்காக விமானம் ஏற உள்ளதாகவும் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதன்பிறகு பெரியசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது செல்போன் தொடர்பு கிடைக்காததால் குடும்பத்தினர் பல்வேறு வழிகளில் தேடியும் இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 14 நாட்களாகப் பெரியசாமியின் நிலை என்னவானது என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
பெரியசாமிக்கு 6 வயது மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தந்தை எப்போது ஊர் திரும்புவார் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகளையும், கணவரின் நிலை என்னவென்று தெரியாமல் தவிக்கும் மனைவியையும் இச்சம்பவம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தனது கணவரைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரியசாமியின் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் பி. ஆகாஷிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற கணவர் துபாய் வந்ததாகத் தகவல் தெரிவித்த பின்னர் மாயமானதால், அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்டுத் தர மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.