சிவகங்கை அருகே உள்ள பையூர் சமத்துவபுரத்தில் பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பொது குளியலறை மற்றும் கழிப்பறை கட்டிடம் கடந்த ஒரு ஆண்டாக பராமரிப்பின்றி பழுதடைந்து கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிப்பறை கட்டிடம் சேதமடைந்ததால் பெண்கள் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் சுற்றுப்புறத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக் கேடும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதி பெண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் முட்புதர்களை நாடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை நீடித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக வாணியங்குடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, பழுதடைந்த குளியலறை மற்றும் கழிப்பறை கட்டிடங்களை உடனடியாக சீரமைத்து, புதிய உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.