தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ரோட்டரி சங்கம் சார்பில் நடராஜபுரம் தெரு அங்கன்வாடி மையத்தில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
வார விழாவில் நடந்த ஊட்டச்சத்து கண்காட்சியினை பாலூட்டும் தாய்மார்கள் பார்வையிட்டு குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்கி அதன் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவு வழங்கி அறிவுக்கூர்மையுள்ள குழந்தையாக உருவாகிட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா தலைமை தாங்கினார்.
ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு தலைவர் முத்து செல்வம்,ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பாலம்மாள் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன்,ஊரணி தெரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை தாய்மார்களுக்கு வழங்கி பேசினர்.
ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன்,குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பேச்சியம்மாள்,அங்கன்வாடி பணியாளர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.