கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிதம்பராபுரத்தில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் கோவில்பட்டி நகரில் இருந்து நகராட்சி மூலம் அள்ளப்பட்டு வரும் குப்பைகள் சேமிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்  திடீரென அந்த குப்பைக் கிடங்கில்  ஒருபகுதியில் தீப்பிடித்து பற்றி எரிய தொடங்கியது மட்டுமின்றி, தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. மேலும் அதிகளவு புகை எழும்பியதால் அந்த பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சியளிக்கின்றன. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து 2 தீயணைப்பு வண்டிகளும், கழுகுமலையிலிருந்து ஒரு தீயணைப்பு வண்டி என 3 வண்டிகள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

குப்பைகள்  அடிப்பகுதியி நன்கு தீப்பிடித்து இருப்பதால் தீயணைப்புத் துறையினர் மிகுந்த சிரமத்துடன் தீயை அணைத்து வருகின்றனர். தீ அணைந்தாலும் தொடர்ந்து அதிக அளவு புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. அந்த சாலை வழியாக வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தோடு தான் சென்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக கோவில்பட்டி பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால்  குப்பைகள் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related

“சுரண்டை அருகே விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி!”